Tuesday 1 May 2012

ஒரு பலூனின் கதை







கொண்டாட்டங்களை விரும்பாத மனித மனம் இருக்க முடியுமா? பண்டிகைகளையும், திருவிழாக்களையும் நாளும் கிழமைகளையும் கொண்டாடிப் பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது. வேட்டை நாயாய் விரட்டிக் கொண்டேயிருக்கும் வறுமையையும், வாழ்க்கையையும் அன்றைக்கு ஒரு பொழுதாவது வென்று பார்த்துவிடும் முயற்சியின் வெளிப்பாடுதானே இந்தக் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும்.

மற்ற எல்லாக் காலங்களைக் காட்டிலும், கொண்டாட்டக் காலங்களில் மனிதர்களின் அன்பு அபரிமிதமாய் ஊற்றெடுத்து பூரிக்கிறது. தனக்கென்று மட்டும் வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் எதையாவது வாரி வழங்குகிறது, வாழ்த்துக்களாலும் பரிசுகளாலும் சகமனிதனை திணறடித்து விடுவது இது போன்ற கொண்டாட்டத் தருணங்களில்தானே அதிகமாய் சாத்தியப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பெரியவர்களை காட்டிலும், குழந்தைகளுக்குத்தான் விழாக்காலங்களில் புதுசா றெக்கை முளைத்து விடுகிறது. பள்ளிக்குப் போக வேண்டிய தொல்லை இல்லை என்கிற உற்சாகத்தில் பட்டாம்பூச்சிகளாகி சிறகு விரித்து பறக்கிறார்கள் குழந்தைகள். சின்னச்சின்ன பரிசுகளைக் கொடுத்து சக குழந்தைகளை சிலிர்க்க வைத்துவிடுகிறார்கள். காக்கா கடி கடித்து பலகாரங்களை பரிமாறிக் கொள்கின்றார்கள். இந்த சந்தோசத்தை அடைய பெற்றோர்களை படாத பாடுபடுத்தியும் விடுவார்கள் சமயத்தில் தாங்கள் விரும்பியதை அடைவதற்காக அழுது அடம் பிடித்து கையில் கிடைப்பதை போட்டு உடைத்து.. வீட்டையே ரணகளமாக்கி விடுகிற குழந்தைகளும் உண்டு. இதெல்லாமுமே தாங்கள் விரும்பியதை அடைவதற்காகத்தான்.

அப்படி ஒரு சிறுமிதான் ரஸியா. தான் விரும்பிய தங்க மீனை வாங்குவதற்காக அவள்படும் பாடுகளும், அதனூடே கடந்து செல்லும் துன்பமிக்க மனிதர்களும் நிறைந்த படம்தான்  தி ஒயிட் பலூன் (The White Baloon).

புத்தாண்டை வரவேற்க நகரமே உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம்தான் புத்தாண்டு பிறக்கப்போகிறது. அதற்கான அறிவிப்பும் வானொலிப் பெட்டியில் வந்து கொண்டேயிருக்கிறது. புத்தாண்டை சந்திக்கவும் கொண்டாடவும் கேக்குகளையும் விதவிதமான இனிப்புகளையும் வாங்கிக் கொண்டு எல்லோரும் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நமது கதாநாயகியான ரஸியா, கையில் ஒரு பலூனை வைத்துக்கொண்டு இனிப்புகளும் மீன்களும் விற்கும் கடை ஒன்றின் முன்பு நின்று கொண்டிருக்கிறாள். அவளைத் தேடிக்கொண்டு வரும் தனது தாயிடம் அந்தக் கடையில் இருக்கும் தங்க மீனை வாங்கித்தருமாறு கேட்கிறாள் பேசாமல் வா என்று அதட்டி விட்டு செல்லும் தாயையே ஏக்கத்துடன் பின் தொடர்கிறாள். நம்ம வீட்டுலேயே நிறைய தங்க மீன் இருக்கே என்று தட்டிக்கழிக்கும் தாயிடம் போம்மா அதெல்லாம் ஒல்லிக் குச்சியாட்டம் இருக்கு... கடையில இருக்கும் மீன் குண்டா அழகாயிருக்கு அது நீந்தும் போது டான்ஸ் ஆடுற மாதிரியே இருக்கு என்று சிணுங்குகிறாள்.

கண்ணைக் கசக்கிக்கொண்டே அழும் தங்கைக்காக அவளது அண்ணன் தாயிடம் பரிந்து பேசுகிறான். நச்சரிப்பு தாங்காத தாயும் தன்னிடமிருக்கும் கடைசியான ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை மகனிடம் கொடுக்க, அதை அவன் தனது தங்கையிடம் தருகிறான் அதை ஒரு கண்ணாடி குடுவைக்குள் போட்டுக் கொண்டு மீன்கடைக்கு ஓடுகிறாள் ரஸியா. வழியில் பாம்பாட்டி வித்தையை வேடிக்கை பார்க்கும் போது அவளது பணம் பாம்பாட்டியிடம் போய் விடுகிறது, அதை அழுது அடம் பிடித்து திரும்பப் பெற்றுக் கொண்டு மீன் கடைக்கு வருகிறாள்.

அவளின் வருகைக்காக காத்திருப்பதைப் போலவே நீந்திக் கொண்டிருக்கும் தங்க மீனைப் பார்த்து புன்னகைத்து விட்டு கடைபெரியவரிடம் பேரம் பேசிமுடிக்கும் போது குடுவையைப் பார்க்கும் ரஸியா அதில் இருந்த பணத்தை காணாமல் அய்யோ... இதுலதானே வச்சிருந்தேன்.... இப்போ காணோமே பணத்தை தொலைச்சிட்டேன் என அழத்துவங்குகிறாள். வந்த வழியே சென்று தேடுமாறு பெரியவர் வழிகாட்டுகிறார். அப்போது அங்கே வரும் ஒரு கிழவியின் உதவியுடன் பணத்தைத் தேடத்துவங்குகிறாள்.

அப்போது சற்று தொலைவில் தான் தவறவிட்ட பணத்தைக் காணும் ரஸியா அதை எடுக்கச் செல்லும் போது அந்தவழியே ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக செல்கிறது. அதன் வேகத்தில் அடித்துச் செல்லப்படும் அந்த 500 ரூபாய் நோட்டு அருகிலுள்ள கடையின் முன்புறம் கம்பியால் மூடப்பட்டிருக்கும் குழிக்குள் விழுந்து விடுகிறது. கண்ணுக்கு எட்டிய பணம் கைக்கு எட்டாததால் ஏமாற்றமடையும் ரஸியா எப்படி பணத்தை எடுப்பது என யோசிக்கிறாள்.

அருகில் இருக்கும் தையல் கடைக்காரரிடம் பணம் விழுந்த விஷயத்தை சொல்லி உதவுமாறு கூறிவிட்டு கிழவி போய்விடுகிறாள். புது வருடப் பிறப்புக்காக துணி தைக்கக் கொடுத்தவர்களுக்கும் தையல் கடைக்காரருக்குமிடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு விடுவதால் சோர்வடையும் ரஸியா இடையே மீன் விற்கும் கடைக்கு சென்று என்பணம் கிடைத்துவிட்டது, அதை எடுத்து வருகிறேன் என் மீனை யாருக்கும் விற்று விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு மீண்டும் பணம் கிடக்கும் கடைக்கு வருகிறாள்.

தங்க மீன் வாங்கப் போன தங்கையைத் தேடிவரும் அவளது அண்ணன் பணம் தொலைந்த விஷயத்தை அறிந்து தையல்கடைக்காரரின் உதவியை கேட்கிறான். அவரோ, பக்கத்துக் கடை முதலாளி புது வருடப் பிறப்புக்கு சொந்த ஊருக்கு போய்விட்டார் ஒருவாரம் கழித்துத்தான் வருவார் பணம் பத்திரமாகத்தான் இருக்கும் அடுத்த வாரம் வந்த எடுத்துக்கலாமே என்கிறார். புத்தாண்டு பிறப்பு நெருங்கிவரும் அறிவிப்பு வந்து கொண்டேயிருக்கிறது. அவர்களின் தேடலும் தொடர்கிறது. பணத்தை குழிக்குள் இருந்து எடுக்க அண்ணனும் தங்கையும் பல முயற்சிகளை எடுக்கிறார்கள். எதுவும் பலனளிக்க வில்லை. பணம் விழுந்து கிடக்கும் கடைக்காரரின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அவரது வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வருகிறான் அண்ணன்.

அப்போது அந்த வழியே பலூன் விற்கும் சிறுவன் ஒருவன் வருகிறான் அவனிடமிருந்து பலூன் கட்டப்பட்ட குச்சியை பறித்து வருகிறான் அண்ணன். திருடன்.. திருடன்.. என கத்திக்கொண்டு துரத்திவரும் சிறுவனும் ரஸியாவின் அண்ணனும் கட்டிப்புரண்டு சண்டையிட்டு, பிறகு விஷயமறிந்து பலூன் சிறுவன் சமாதானமாகி அவர்களுடன் சேர்ந்து பணத்தை எடுத்துவிட மூவரும் முயற்சிக்கிறார்கள். சூயிங்கம் வாங்கி வந்து குச்சியில் ஒட்டி எடுக்கலாமே என திட்டமிட்டு சூயிங்கமுக்கு அலைகிறார்கள். அதுவும் கிடைக்கவில்லை பலூன்களை விற்கணும் லேட்டாகுது எனச் சொல்லிவிட்டு பலூன் சிறுவன் சென்றுவிடுகிறான்.

மழை வருகிற சூழல் இடி இடிக்கிறது தூறலும் ஆரம்பமாகிறது. அதிக மழை பெய்து வெள்ளம் வந்துவிட்டால் பணத்தை எடுக்க முடியாது. ஒன்றும் புரியாமல் கடை வாசலில் அமர்ந்தபடி அண்ணனும் தங்கையும் விழிக்க புது வருடம் பிறக்க இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கிறது. அதற்குள் பணம் கிடைக்காதா.. தங்க மீன் வாங்கி விட மாட்டார்களா என பார்வையாளர்களும் யோசிக்க சூயிங்கமுடன் மீண்டும் வருகிறான் பலூன் சிறுவன் அங்கே கவிதையாய் அரங்கேறுகிறது ஒரு விளையாட்டு. மூன்று பேரும் புன்னகையோடு சூயிங்கம்மை போட்டி போட்டுக்கொண்டு மென்று எடுத்து பலூன் குச்சியின் அடிப்பாகத்தில் ஒட்டி பணம் கிடக்கும் குழிக்குள் இறக்குகிறார்கள்.

சில நிமிட முயற்சிக்குப்பின் குச்சியில் ஒட்டியபடி பணம் மேலே வருகிறது. பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி தங்க மீனோடு வருகிறார்கள். புத்தாண்டு பிறப்பதற்கு அடையாளமாக வெடிச்சத்தம் கேட்கிறது. புத்தாண்டு பிறந்து விட்ட அறிவிப்பும் வருகிறது. கொண்டாட்ட இசையுடன் படம் நிறைவடைகிறது.

புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் அப்பாஸ் கியாரெஸ்தெமியின் நேர்த்தியான திரைக்கதையை படமாக்கிய இயக்குநர் ஜாபர் பனாஹிக்கு இதுதான் முதல் படம். மனிதாபிமானம் வழியும் சம்பவங்களை கவிதையாகச் சொல்வதே தனது பாணி என அறிவித்து படம் எடுத்திருக்கும் இவரது படங்களில் கெட்டவர்கள் என்று யாரும் இல்லை.

1995 இல் வெளியான இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றது. உலக சினிமா வரிசையில் வைத்து கொண்டாடப்படுகிற இப்படத்தின் இயக்குநர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். படம் நெடுக வரும் பாம்பாட்டி, கிழவி, தையல் கடைக்காரர், பலூன் விற்கும் சிறுவன் பணம் விழுந்து கிடக்கும் கடைக்காரர், ரஸியாவின் அண்ணன் என எல்லோருமே அன்பொழுகும் மனிதர்களாகவே உலா வருகின்றனர். 

நிமிடத்திற்கொரு சதி செய்யும் வில்லன்களையும், வன்மம் மிகுந்த மனிதர்களையும் வீச்சரிவாளோடு திரியும் வீர சாகச நாயகர்களையும் பார்த்துப் பழகிய நமக்கு இப்படத்தின் பாத்திரங்கள் வித்தியாசமாகவே தெரிகிறார்கள். இவர்களெல்லாம் சேர்ந்து ரஸியாவின் புத்தாண்டை கொண்டாட்ட நாளாக்கி விடுகிறார்கள். படத்தை பார்த்தால் நீங்களும் கொண்டாடுவீர்கள் ரஸியாவை.

எஸ்.கருணா 

ஒரு காலணியின் கதை



எத்தனை யுகங்கள் போனாலும்... என்னதான் வித்தைகள் செய்தாலும்... எவ்வளவு பெரிய பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலுங்கூட... குழந்தைகளின் மனசுக்குள் என்னதான் இருக்கிறதென்று இதுவரை எவராலும் கண்டுபிடித்துவிட முடியவில்லை. இயற்கையின் பிடிபடாத மர்மமாகவே இருக்கிறது குழந்தைகளின் அக உலகம்.
இதுவரை உலகம் சொல்லிவைத்திருக்கிற எல்லா நீதிகளையும்... எல்லா போதனைகளையும் ஒரு நொடியில் சர்வசாதாரணமாகக் கடந்து போய்... அதற்கும் மேலான ஒரு நீதியைச் சொல்லி நம்மைப் பார்த்து பரிகசிக்கிறார்கள் குழந்தைகள். அவர்களின் முன்னால் மண்டியிட்டு சரணாகதி அடைவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை போலிருக்கிறது. ஆனால் எல்லாம் தெரிந்த நமது பெரிய மனம் அதற்கு லேசில் ஒப்புக் கொள்ள மாட்டேன்கிறதே.
ஆனாலும்... அதனாலொன்றும் பாதகமில்லையென தங்கள் போக்கிலேயே போய்க்கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். சிலநேரம் அழுகிறார்கள். பல நேரம் சிரிக்கிறார்கள். திடீரென சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.. போர்க்களம் போல அடித்து மாய்ந்து கொள்கிறார்கள்.. சடாரென எல்லாவற்றையும் மறந்துவிட்டு மறுகணமே தோளில் கைபோட்டு ஒன்றாகி விடுகிறார்கள். எதையும் யாருக்கும் தரமாட்டேனென்று அடம் பிடிக்கிறார்கள். அடுத்த நொடியே எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து விளையாட்டு காட்டுகிறார்கள். நொடிக்கொருதரம் மாறிக்கொண்டேயிருக்கும் மழைக்காலத்து மேகங்களைப் போல மாறிமாறி அன்பைப் பொழிகிறார்கள் நமது குழந்தைகள்.
தன் வயதொத்த குழந்தையின் துயரத்தை சகித்துக் கொள்ள குழந்தைகளால் ஒருபோதும் முடிவதில்லை. அந்தத் துயரத்தில் பங்கெடுத்து... அதற்கு விடை காண என்னவெல்லாமோ செய்கிறார்கள். வகுப்பறையிலோ, பள்ளியிலோ, தெருவிலோ தனது சக தோழனோ, தோழியோ... அண்ணனோ, தங்கையோ எதையாவது தொலைத்துவிட்டு பரிதவிக்கும்போது கூடவே நின்று பதறிப்போகிறார்கள். அப்புறமென்ன கூட்டணி போட்டுக் கொண்டு தேடுதல் வேட்டையோ, தொலைத்ததை பெற்றோர்களுக்கு தெரியாமல் மறைத்துவிடும் சாமர்த்தியமோ.. சத்தமில்லாமல் அரங்கேறிவரும்.
அப்படித்தான்.. ஒரு ஜோடி காலணிகளை (ஷூ) தொலைத்து விட்டு ஒரு அண்ணனும் தங்கையும் படும் அவஸ்தைகளையும்.. சாமர்த்தியங்களையும்.. அதனூடே வெளிப்படும் குழந்தைகளின் மேதைமைகளையும் அற்புதமாய் சொல்கிறது மஜித்மஜித் தின் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ என்கிற ஈரானியத் திரைப்படம்.
அது ஒரு ஏழ்மையான குடும்பம். அப்பா கூலி வேலைக்கு செல்பவர். நோயாளியான அம்மா கைக்குழந்தையுடன் வீட்டில் இருக்கிறார். அந்த வீட்டின் பெரிய பையன் ‘அலி’ பத்து வயதிருக்கும் அவனுக்கொரு தங்கை ‘ஸாரா’ ஆறு வயது சிறுமி. ஒரு நாள் தங்கையின் கிழிந்து போன ஷூவை தைப்பதற்காக எடுத்துச் செல்லும் அண்ணன் அலி, அதனை காய்கறி கடையொன்றில் வைத்துவிட்டு காய்கறி வாங்கும் போது, பழைய பிளாஸ்டிக் பேப்பர் பொறுக்கும் ஒருவர் அதை பழையது என நினைத்து எடுத்துச் சென்று விடுகிறார். காய்கறி வாங்கிக் கொண்டு திரும்பும் அலி, ஷூவைக் காணாமல் தேடுகிறான். கிடைக்கவில்லை. வேதனையுடன் வீட்டிற்கு திரும்பும் அலி ஷூ தொலைந்து போனதை தங்கை ஸாராவிடம் சொல்கிறான். தங்கை அழுகிறாள்.
இரவில் இருவரும் ஒன்றாக அமர்ந்து படிக்கும் போது, தொலைந்து போன ஷூவைப் பற்றி எழுதி, எழுதி பேசிக்கொள்கின்றனர். தனது நோட்டில் ஷூ இல்லாமல் எப்படி பள்ளிக்கு போவது என எழுதி அலியிடம் காட்டுகிறாள் ஸாரா. செருப்பு போட்டு போகலாமே என பதிலுக்கு எழுதுகிறான் அலி. கோபமான ஸாரா அப்பாவிடம் சொல்லிடுவேன் என எழுத, அப்பாவிடம் சொன்னால் ரெண்டு பேரும்தான் அடிவாங்கணும். தவிரவும் ஷூ வாங்க அப்பாவிடம் பணம் இருக்காது என அலி பதிலுக்கு எழுத, ஒரே ஷூ வை காலையில் அவளும், மதியம் அவனும் மாற்றி மாற்றி போட்டுச் செல்வதென முடிவுக்கு வருகிறார்கள். ஈரானில் பெண்களுக்கு காலை வேளையும் ஆண்களுக்கு மதியம் வேளையும் தான் பள்ளி நடக்கும் என்பதால் இந்த ஏற்பாடு சாத்தியமாகிறது.
அதன்படியே காலையில் ஸாரா ஷூ அணிந்து செல்கிறாள். பள்ளி விட்டதும் சந்து பொந்துகளில் புகுந்து ஓட்டமாய் ஓடிவந்து அலிக்கு ஷூவை தர, அவன் போட்டுக் கொண்டு தாமதமாக பள்ளிக்குப் போக... இப்படியே தொடர்கிறது துயரம் மிகுந்த அந்த கண்ணாமூச்சி விளையாட்டு. இதனால் இருவருக்குமே ஏகப்பட்ட சிக்கல்கள். இருக்கும் ஒரே ஷூவை மழையில் நனைந்து விடாமல் பாதுகாப்பது, அண்ணன் காத்திருப்பானே என அவசர அவசரமாய் தேர்வு எழுதுவது. ஓடும்போது தவறி சாக்கடைக்குள் விழுந்து அடித்து செல்லப்படும் ஷூவை துரத்திச் செல்வது என ஸாராவுக்கும், தினமும் பள்ளிக்கு தாமதமாகவே போக நேரிடுவதால் தலைமை ஆசிரியரிடம் திட்டு வாங்கும் நிலை அலிக்கும் ஏற்படுகிறது. ஒரு விடுமுறை நாளில் தந்தையுடன் தோட்ட வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்திலாவது ஸாராவுக்கு ஷூ வாங்கிவிட அலி முயல்கிறான். அதுவும் முடியவில்லை.
இப்படியாக நீளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பு ஒன்று அலிக்கு கிடைக்கிறது. பள்ளிகளுக்கிடையிலான ஓட்டப்பந்தயப் போட்டிதான் அது. அதில் 3வது பரிசை பெற்றுவிட வேண்டுமென அலி அதில் பங்கேற்கிறான். ஓட்டப்பந்தயம் நடக்கிறது. மற்ற மாணவர்களுடன் அலியும் ஓடுகிறான். சாக்கடை சந்துகளுக்குள் ஓடிவந்தது நினைவுக்கு வர, இன்னும் வேகமெடுத்து ஓடுகிறான். அவனுக்கு பின்னால் வந்த மாணவன் அலியின் சட்டையை பிடித்து இழுக்கவே தடுமாறி கீழே விழும் அலி மீண்டும் எழுந்து வெறி கொண்டு ஓடி வெற்றிக் கோட்டை தொடுகிறான். எல்லாரும் அவனை கட்டித் தழுவி பாராட்டும்போது, சார்... நான் மூன்றாவதாக வந்துவிட்டேனா... என்று கேட்கிறான். ஆனால் தலைமை ஆசிரியரோ நீதாண்டா முதல் பரிசு என்று கட்டித்தழுவுகிறார். அந்த வெற்றியை கொண்டாட முடியாமல் கண்ணீர் விடுகிறான் அலி.
தோல்வியுடன் அவன் வீடு திரும்பும் போது, அவனது தந்தை அவனுக்கும் ஸாராவுக்கும் புதிய ஷூ க்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறார். அலி வேதனையுடன் வீட்டிலிருக்கும் தண்ணீர் தொட்டிக்குள் ஓடி ஓடி புண்ணாகிப்போன கால்களை வைக்கிறான். அந்தத் தொட்டியிலிருக்கும் தங்கநிற மீன்கள் அவன் காலையே சுற்றிச் சுற்றி வர கனத்த இசையுடன் நிறைவடைகிறது படம்.
குழந்தைகள் எவ்வளவு அன்பானவர்கள், விட்டுக்கொடுப்பவர்கள், பொறுப்பு மிக்கவர்கள், நேர்மையானவர்கள் என்பதை படத்தின் காட்சிகளில் விளக்கிச் செல்கிறார் இயக்குநர் மஜித் மஜித். தொலைந்து போன தனது ஷூவை ஒரு சிறுமி அணிந்திருப்பதை ஸாரா பார்த்துவிட்டு அண்ணனிடம் சொல்கிறாள். இருவரும் அந்தச்சிறுமியின் வீட்டிற்கு செல்லும்போது அது தங்களைப் போலவே ஏழ்மையான குடும்பமென்பதையும் அச்சிறுமியின் தந்தை கண் பார்வையற்றவர் என்பதையும் உணர்ந்து கொண்டு ஷூவை கேட்காமலேயே திரும்பி வரும் காட்சி, அற்ப காரணங்களுக்காக அண்டை வீட்டாரோடு சண்டையிடும் நம்மை வெட்கங்கொள்ள செய்துவிடும். அதே சிறுமி ஸாராவின் தொலைந்துபோன பேனாவை கீழே கண்டெடுத்து அதை ஸாராவிடம் கொண்டு வந்து கொடுக்கும் நேர்மை நம்மை அதிர்ச்சியடைய வைக்கும்.
தொலைந்த ஷூவைப் பற்றி ஸாராவும், அலியும் நோட்டு புத்தகத்தில் எழுதி உரையாடும் காட்சி, ஷூவை பரிமாறிக்கொள்ள ஸாராவும் அலியும் அந்த குறுகியத் தெருக்களில் சாக்கடைகளைத் தாண்டித்தாண்டி ஓடிவரும் காட்சி, மழைநீரில் ஓடும் ஷூவைத் துரத்தும் காட்சி, ஓட்டப்பந்தயம் காட்சி என திரைக்கதையில் விளையாடி இருப்பார் மஜித் மஜித்.
வெற்று பிரம்மாண்டங்களோ.. வீணான ஆடம்பரங்களோ இல்லாமல் 1997ஆம் ஆண்டில் வெறும் 75 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம்தான் ஈரானிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல்படம். வார்ஷா, மாண்ட்ரியல், டெஹ்ரான், சிங்கப்பூர், ப்ராங்க்பர்ட் திரைப்பட விழாக்களில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட படம்.
இப்படத்தின் இயக்குநர் மஜித் மஜித், சமகால ஈரானிய இயக்குநர் களில் முதன்மையானவர். தமது 14வது வயதில் நாடகச்செயல்பாடுகளை தொடங்கிய மஜித் 1992ல் ‘பாதக்’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர். ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ இவரது மூன்றாவது படம்.
வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு கலாசாரங்கள் என்ற பிரிவினை இருந்தாலும் கலையின் மொழி மனிதர்களை ஒன்றிணைப்பதாய் இருக்க வேண்டும். ஈரானின் கலாசாரமும் நமது கலாசாரமும் வேறு வேறு தான். ஆனால் அலியும் ஸாராவும் நம் வீட்டு குழந்தைகளாகவே தெரிகிறார்கள். அதனாலேயே இந்தப்படம் உலக சினிமாவில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. 
 எல்லாவற்றையும் விட குழந்தைகள் உலகைப் போன்ற எளிமையான, பாசாங்கற்ற, தூய்மையான உலகம் வேறு எங்கும் இல்லை. அதோடு அது உண்மைக்கு வெகு அருகிலும் இருக்கிறது. நமது அலியைப் போல.. ஸாராவைப்போல... இதைப் புரிஞ்சிக்க என்ன செய்யலாம்னு தானே யோசிக்கிறீங்க.. இந்தப் படத்தை ஒருமுறை பாருங்களேன்..

எஸ்.கருணா

ஒரு திரையரங்கின் கதை



இன்றைக்கும் சிறு நகரமொன்றை ரயிலிலோ ... பேருந்திலோ ... நீங்கள் கடந்து செல்லுகையில், தன் பிரம்மாண்டத்தை இழந்துவிட்டு, முட்புதர் மண்டிக்கிடக்கும் பாழடைந்த திரையரங்குகளை எங்காவது காண நேரிடலாம். இளமையின் வசீகரம் தொலைத்து நிற்கும் கிழட்டு கணிகையைப் போல அந்தத் திரையரங்கம் உங்களை கடந்து போகையில், உங்கள் மனம் உங்களின் பால்ய காலத்துக்குத் திரும்ப நேரிடலாம்.
ஒவ்வொருவரின் பால்ய காலத்து நினைவடுக்குகளிலும் கூடப்படித்த ஒரு பெண்ணோ, நேசிப்புக்குரிய ஒரு டீச்சரோ, நிழலாய் பிரியாமல் கூடவே திரிந்த நட்போ, அழியாமல் இருப்பதைப் போலவே, அதாவது ஒரு திரையரங்கமும் உங்கள் நினைவில் அழிக்க முடியாமல் படிந்திருக்கும். அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்தபடி இனம் புரியாத ஒரு மிரட்சியுடன் முதன் முதலில் பார்த்த சினிமாவும் ... முதன் முதலில் போன திரையரங்கம் மங்கலான ஏடுகளுடன் இன்னமும் நினைவிருக்கக்கூடும்.
சின்னஞ்சிறு வயதில் சினிமா தியேட்டர் குப்பைகளில் தேடிப் பொறுக்கியெடுத்த பிலிம் துண்டுகளை வைத்து, வீட்டுச் சுவரிலோ. இழுத்துக்கட்டிய அப்பாவின் பழைய வெள்ளை வேட்டியிலோ படம் காட்டிய அனுபவமும் எல்லாருக்கும் இருக்கும். அல்லது சினிமா டிக் கெட்டுக்காக ஊறுகாய் வற்ற லையோ, மல்லாட்டை காய் களையோ பண்ட மாற்று கொடுத்து, தெருப்பசங்க காட்டிய சினிமாவைப் பார்த்த அனுபவமா வது நிச்சயம் இருக்கும். இப்படி ஓவ்வொருவருக்குள்ளும் சினிமாவும், சினிமா திரையரங்கும் எதாவது ஒருவிதத்தில் பதிவாகியிருக்கும்.
ஆயிரம் பேர் ஒரேநேரத்தில் ஒன்றாக அமர்ந்து தனித்தனியாகவும், அதே சமயம் கூட்டாகவும் கனவு காண்கிற அத்தகைய திரையரங்குகள் குறித்து சொல்வதற்கு. நம் ஒவ்வொருவரிடமும் நிச்சயம் ஒரு கதை மிச்சமிருக்கும், அப்படி சொல்லப்பட்ட ஒரு கதையின் திரைவடிவம்தான் சினிமா பாரடைசோ (ஊiநேஅய ஞயசயனளைடி) என்கிற இத்தாலிய மொழித் திரைப்படம். ஒரு சிறுவனுக்கும் திரையரங்கிற்குமான உறவை உயர்ந்த அழகியலோடு சொல்கிறது இப்படம், சல்வடோர் டி விட்டா. இவர் ரோம் நகரத்தின் பிரபலமான திரைப்பட இயக்குநர். சில உறுதியான லட்சியங்களுடன் 30 வருடங்களுக்கு முன்பு தனது கிராமத்திலிருந்து வந்து ரோமில் திரைப்படத் துறையில் நிலையான இடத்தை பிடித்தவர். தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் அவருக்கு அவரது சொந்த ஊரில் இருந்து வந்த ஒரு செய்தி காத்திருக்கிறது,. சொந்த ஊரில் அல்ஃபிரதோ இறந்து விட்டார் என்ற அந்த செய்தி சல்வடோருக்குச் சொல்லப்பட்டதும், தனிமையில் அவரது நினைவுகள் சொந்த ஊருக்குச் செல்கிறது, பிளாஷ் பேக்கில் பயணம் தொடங்குகிறது.
சல்வடோர் அப்போது எட்டு வயது சிறுவன், டோட்டோ என்ற செல்லப் பெயருடன் பள்ளிக்குச் செல்வது, மற்ற நேரங்களில் அங்கிருக்கும் தேவாலயத்தில் பாதிரியாருக்கு உதவுவது என்று போய்க் கொண்டிருக்கும் டோட்டோவுக்கு, அந்த ஊரின் மையத்தில் இருக்கும் சினிமா பாரடைசோ ஏன்ற திரையரங்கத்தின் ஆபரேட்டரான அல்ஃபிரதோவின் நட்பு கிடைக்கிறது, 60 வயதைத் தாண்டிவிட்ட முதியவரான அல்ஃபிரதோவும் ஏட்டு வயது சிறுவன் டோட்டோவும் நண்பர்களாகிறார்கள். இந்த நட்பால் எந்நேரமும் தியேட்டரிலேயே இருக்கிற வாய்ப்பும் டோட்டோவுக்குக் கிடைக்கிறது, அந்தத் தியேட்டரில் திரையிடப்படும் எல்லாப் படங்களையும் அந்த ஊரின் பாதிரியார்தான் முதலில் பார்ப்பார். படத்தில் இருக்கும் முத்தக் காட்சிகளை தணிக்கை செய்து வெட்டிவிடுவார். அல்ஃபிரதோவும் அவ்வாறே வெட்டிவிட்டு படத்தைத் திரையிடுவார். அப்படி வெட்டப்பட்டு கிடக்கும் முத்தக்காட்சிகள் கொண்ட திரைப்படச் சுருளைத் தனக்குத் தர முடியுமா என்று டோட்டோ கேட்கிறான், நேரம் வரும்போது தருகிறேன் என்கிறார் அல்ஃபிரதோ.
டோட்டோவின் அப்பா ராணுவத்திற்கு போய்விட்டார், அவனது அம்மா எப்போதும் தனிமையில் எம்பிராய்டரி போட்டுக் கொண்டேயிருக்கிறாள், டோட்டோவுக்கு ஒரு தங்கையும் உண்டு, ஒரு நாள் பால் வாங்கி வரச்சொல்லி அம்மா கொடுத்த பணத்தில் சினிமா பார்க்கிறான் டோட்டோ. படம் முடிந்து வெளியே வரும்போது, தியேட்டர் வாசலில் காத்திருக்கும் தாயிடம் 5 ரூபாய் தொலைந்துவிட்டதாக பொய் சொல்கிறான் டோட்டோ, இதனால் ஆத்திரமடையும் தாய் அவனை அடிக்கும் போது, அங்கு வரும் அல்ஃபிரதோ, வழியில் கிடைத்ததாகச் சொல்லி தன்னிடமிருக்கும் ஐந்து ரூபாயைக் கொடுத்து டோட்டோவைக் காப்பாற்றுகிறார், நீங்கதான் இவனை கெடுக்கறீங்க என்று அல்ஃபிரதோவை டோட்டோவின் அம்மா திட்டுவதால், இனி ஆபரேட்டர் அறை பக்கம் வராதே என்று கண்டிக்கிறார் அல்ஃபிரதோ.
முதியோர் கல்வியில் பயிலும் அல்ஃபிரதோ, தேர்வு எழுதுவதற்காக டோட்டோவின் வகுப்புக்கு வருகிறார், கேள்விக்குப் பதில் தெரியாமல் தவிக்கும் அல்ஃபிரதோ, டோட்டோவிடம் உதவுமாறு கேட்கிறார், பதிலுக்கு, எனக்கு புரஜெக்டரை இயக்க சொல்லித் தருவாயா? என்று டோட்டோ நிபந்தனை வைக்கிறான். ஆல்ஃபிரதோவும் ஒப்புக்கொண்டு டோட்டோவின் உதவியுடன் தேர்வை எழுதி முடிக்கிறார். அடுத்த நாளிலிருந்து புரஜெக்டரை இயக்குவது பற்றி கற்றுத் தருகிறார் அல்ஃபிரதோ. மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறான் டோட்டோ.
ஒரு நாள் தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம்.
கடைசிக் காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. மறுநாள் வேறு புதிய படம் திரையிடப் போகிறார்கள். அதனால் இப்போது அந்தப் படத்தை கடைசியாக பார்த்துவிட கூட்டம் முண்டியடிக்கிறது. அப்போது அல்ஃபிரதோ புரஜெக்டரின் லென்ஸைத் திருப்பி, அருகில் இருக்கும் வீட்டுச் சுவரின் மீது படத்தைத் திரையிடுகிறார், அதைப் பார்த்து மக்கள் கூட்டம் உற்சாகம் கொள்கிறது. அப்போது திடீரென புரஜெக்டர் சூடாகி, திரைப்படச் சுருள் பற்றியெரிந்து தியேட்டரில் தீப்பற்றிக் கொள்கிறது. பற்றி எரியும் தீயில் மயங்கி விழும் அல்ஃபிரதோவை டோட்டோ காப்பாற்றுகிறான். ஆனாலும் அந்த விபத்தில் ஆல்ஃபிரதோ கண்பார்வை ஈழந்து விடுகிறார், தீக்கிரையான தியேட்டரை, லாட்டரியில் பெரும் பணம் பெற்ற புதுப்பணக்காரன் ஒருவன் வாங்கி புதுப்பிக்கிறான். புதிதாக உருவான பாரடைசோ திரையரங்கின் ஆபரேட்டர் வேலை டோட்டோவுக்கு கிடைக்கிறது. ஆனால், இது உனக்கு வேண்டாம். நீ நன்றாக படிக்க வேண்டும் என்று ஆல்ஃபிரதோ வழிப்படுத்துகிறார். டோட்டோ படித்துக்கொண்டே மாலை நேரங்களில் தியேட்டரில் வேலை பார்க்கிறான்.
இப்போது இளைஞனாகிவிட்ட டோட்டோ, தனக்குக் கிடைத்த எட்டு எம்,எம், கேமிராவை வைத்துக் கொண்டு காண்பதையெல்லாம் படம் பிடிக்கிறான். அப்படியொரு சந்தர்ப்பத்தில் எலினா என்ற பெண் அவனது காமிராவுக்குள் விழுகிறாள். அதே சமயத்தில் எலினா மீது காதலில் விழுகிறான் டோட்டோ. காமிராவில் படம் பிடிப்பது போலவே எலினா மீதான டோட்டோவின் காதலும் சுருள் சுருளாய் வளர்கிறது. ஆனால் அவனது காதல், அல்ஃபிரதோவுக்குக் கவலையளிக்கிறது, அந்த காதல் வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் காதலுக்குக் காதும் கிடையாதல்லவா?எலினாவின் தந்தைக்கு பணிமாறுதல் கிடைப்பதாலும், டோட்டோ ராணுவ சேவைக்குச் செல்ல வேண்டியிருப்பதாலும் இருவரும் பிரிய நேரிடுகிறது. கடைசியாக ஒரு வியாழக்கிழமையன்று திரையரங்கில் இருவரும் சந்தித்துக் கொள்வதென்று முடிவு செய்கிறார்கள். திரைக்கதையின் முடிச்சினால் இருவரும் சந்திக்க இயலாமல் போய்விடுகிறது. ராணுவ சேவைக்கு சென்றுவிட்ட டோட்டோ அங்கிருந்து எலினாவுக்கு எழுதும் கடிதங்கள் அனைத்தும் திரும்பி வருகின்றன.
ராணுவ சேவை முடித்து திரும்பி வரும் டோட்டோவுக்கு தியேட்டரில் வேலை இல்லை. எலினாவும் ஊரில் இல்லை. பித்துப் பிடித்து அலையும் டோட்டோவை, ஊரை விட்டுப் போகச் சொல்கிறார் அல்ஃபிரதோ. ரயில் நிலையத்தில் வழியனுப்பும் போது, நீ பெரிய ஆளாக வேண்டும். பழைய காதல் நினைவுகளை மறந்துவிடு, ஊருக்குத் திரும்பி வராதே. எனக்குக் கடிதம் கூட எழுதாதே. எந்த வேலையாக இருந்தாலும் தியேட்டர் ஆபரேட்டர் வேலையை போல நேசித்து செய். மனதை அலைய விடாதே என்று சொல்லியனுப்புகிறார் அல்ஃபிரதோ.
பிளாஷ்பேக் முடிகிறது. அப்போது ஊரைவிட்டுப்போன சல்வதோர் என்கிற டோட்டோ இப்போதுதான் ... 30 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வருகிறார். இளைஞனாக ரயிலேறியவன், வெற்றி பெற்ற திரைப்பட இயக்குநராக விமானத்தில் வந்து இறங்குகிறான். ஊரும் உறவுகளும் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போய் இருக்கிறது.
அன்று அல்ஃபிரதோவின் இறுதி ஊர்வலம் நடக்கிறது, மிகக்குறைந்தபேரே இருக்கும் அந்த ஊர்வலத்தில் தனது பால்ய காலத்து நண்பர்கள் சிலர் இருப்பதையும் காண்கிறார் சல்வடோர்,. சினிமா பாரடைசோ தியேட்டர் அருகே சவ ஊர்வலம் சிறிது நேரம் நின்று செல்கிறது. அந்த ஊர்வலத்தில் பழைய தியேட்டர் உரிமையாளரையும் பார்க்கிறார். அவர் தியேட்டரை விற்றுவிட்டதாகவும், நாளை தியேட்டரை இடித்துத் தள்ளப்போகிறார்கள் என்ற துயரச் செய்தியையும் கூறுகிறார். அந்தத் தியேட்டரை தனிமையில் சென்று பார்க்கிறார் சல்வடோர். பாழடைந்த ஆபரேட்டர் அறை, இடிந்து கிடக்கும் சுவர்கள் என எல்லாவற்றையும் ஈரம் கசியும் நினைவுகளோடு பார்க்கிறார் சல்வடோர்.
தனது காதலி எலினாவை அந்த ஊரில், முப்பது வருடங்கள் கழித்து ஒரு காருக்குள் சந்தித்துப் பேசுகிறார். அவர்களின் கடைசி சந்திப்பு நிகழாமல் போனதற்கு அல்ஃபிரதோதான் காரணம் என்றும், அன்று உன்னை சந்தித்திருந்தால் உன் வாழ்க்கை மாறியிருக்கும். இவ்வளவு பெரிய ஆளாக நீ வந்திருக்க முடியாது என எலீனா சொல்கிறாள். அல்ஃபிரதோவை நினைத்து கலங்குகிறார் சல்வடோர், அல்ஃபிரதோவின் மனைவி சல்வடோரிடம், அல்ஃபிரதோ கொடுக்கச் சொன்னதாக படச்சுருள் அடங்கிய ஒரு பெட்டியை தருகிறாள், அடுத்த நாள் சினிமா பாரடைசோ இடித்துத் தள்ளப்படுகிறது. ஊர் மக்கள் தியேட்டரின் முன் கலங்கி நிற்கிறார்கள். நொறுங்கி விழும் கட்டடத்தின் தூசி மேலெழும்ப கனமான நினைவுகளுடன் ஊருக்குத் திரும்புகிறார் சல்வடோர்.
அவரது அடுத்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் விருதுக்காக பாராட்டவும், பேட்டி காணவும் காத்துக்கிடப்பவர்களை புறக்கணித்துவிட்டு, யாருமற்ற தனிமை நிறைந்த திரையரங்கில் அல்ஃபிரதோ கொடுத்தப் பெட்டியிலிருந்த படச்சுருளை திரையிட்டுப் பார்க்கிறார். சிறு வயதில் அல்ஃபிரதோவிடம் கேட்ட முத்தக் காட்சிகள் நிரம்பிய படச்சுருள் அது, திரையில் அடுத்தடுத்து முத்தக் காட்சிகள் ஓடுகிறது. விதவிதமான மனிதர்களின் விதவிதமான முத்தக் காட்சிகளுடன் கண்ணீர் வழிய அல்ஃபிரதோவை எண்ணி சல்வடோர் வியப்பதுடன் நிறைவடைகிறது படம்.
1988ல் வெளியான இப்படத்தின் இயக்குநர் கி செப்பே டொர்னாடோரே. இத்தாலியில் பிறந்த இவர் நாடக, புகைப்படக் கலைஞராக இருந்தவர். 1986ல் தி புரொபசர் படத்தை இயக்கி சினிமாவுக்கு வந்தவர். இவரது 2வது படமான சினிமா பாரடைசோ ஆஸ்கர் உள்ளிட்ட எராளமான விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறது, 185 நிமிடங்கள் ஓடக்கூடியதாகத் தயாரான இப்படம் முதலில் 155 நிமிடங்கள் ஓடக்கூடியதாகத்தான் திரையிடப்பட்டது. பின்னர் மீண்டும் 185 நிமிடப் படமாகவும் திரையிடப்பட்டது. ஒரு திரையரங்கை மையப் புள்ளியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அப்படம் உலகின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது.
டிவிடி தொழில்நுட்பத்தின் வருகையால் இன்று திரையரங்குகள், வணிக வளாகங்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறிவிட்டன, நமது வீடுகளேக் கூட திரையரங்குகளாக மாறிப்போய்விட்டன. இங்கு உயரிய தொழில் நுட்பத்துடனான படத்தை நாம் காண முடியும் என்றாலும், அது கூட்டத்தோடு உட்கார்ந்து கனவு காண்கிற அனுபவத்தை தந்து விட முடியுமா?சினிமாவை நேசிப்பவர்களும், திரையரங்கை நேசிப்பவர்களும் இந்தப் படத்தை பார்த்தால், தங்கள் ஊரிலும் இடிக்கப்பட்டு தரைமட்டமாகிவிட்ட எதாவதொரு திரையரங்கின் நினைவுகளில் மூழ்கிப் போவதை தவிர்க்க இயலாது, தவிர்க்கவும் கூடாதுதானே.



எஸ்.கருணா

முதல் சினிமாவின் கதை



பாரிஸ் நகரத்தில் 1895 ஆம் ஆண்டு இருந்த கிராண்ட் கபே எனும் அரங்கில் கைகளில் மதுக்கோப்பைகள் வழிய கோட்டும், சூட்டுமாய் கூடி இருந்தது ஒரு கூட்டம். அடுத்து வரும் நூற்றாண்டுகளை தலைகீழாக புரட்டிப்போடப்போகும் ஒரு மாபெரும் கலையின் பிறப்பை முதன்முறையாக தரிசிக்கப்போகிறோம் என்றெல்லாம் அங்கு கூடி இருந்த கனவான்களுக்கு தெரியாது. பாரிஸ் போன்ற நகரங்களில் அடிக்கடி நடத்தப்படும் ஏதோ ஒரு சில கண்டுபிடிப்புகளின் விளம்பரக் காட்சி போன்றதொரு வழக்கமான காட்சிதான் இதுவும் என்று அவர்கள் சுவாரசியம் ஏதும் இன்றி இருந்திருக்கக்கூடும்.
இழுத்துக்கட்டப்பட்ட அகன்ற வெள்ளைத்திரையில் தாங்களே உருவாக்கியிருந்த ஒரு கருவியின் துணையோடு உலகின் முதல் சலனப்படத்தை திரையிட்டார்கள் அகஸ்த் லூமியே, லூமி லூமியே என்ற அந்த அபூர்வ சகோதரர்கள். வெள்ளைத்திரையில் புகையை கக்கியபடி வந்து.. நின்று.. புறப்பட்டுப்போனது ஒரு புகைவண்டி. இந்தப் “புகைவண்டியின் வருகை” (Arrival of a train) யோடுதான் உலகின் சினிமா சகாப்தம் துவங்கியது. சில நிமிடங்களே ஓடிய அந்த சின்னஞ்சிறிய துண்டுப் படத்துடன் துவங்கிய சினிமா என்னும் புதிய கலை இன்று உலகையே கட்டி ஆளுகிறது.
18ஆம் நூற்றண்டின் இறுதியில் பறக்கத்துவங்கிய சினிமாவின் ஜெயக்கொடி இன்னமும், கனகம்பீரமாக பறந்துகொண்டே இருக்கிறது. சினிமா என்கிற இந்த மகத்தான கலைவடிவம் நூற்றாண்டுகளின் இடையறாத ஓட்டத்தில் நமது வாழ்வில் ஊடுருவி நமது மூளை அடுக்குகளில் நிரந்தரமாக நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டுவிட்டது. இப்போதெல்லாம் சினிமாவை தவிர்த்துவிட்டு எதையுமே யோசிக்க முடியாது போல் ஆகிவிட்டது. நமது காதல் தொடங்கி கல்யாணம் வரையிலும் எதுவும் சினிமாவின் பாதிப்பில் இருந்து தப்பமுடியவில்லை. நமது பண்டிகைகளும், திருவிழாக்களும் புதிய சினிமா இல்லாமல் நகர மறுக்கின்றன. நமது அரசியலில் சினிமாவின் கை இருந்து கொண்டேதான் இருக்கிறது.
ஆனாலும் சினிமாவை நாம் எப்படி புரிந்துகொண்டிருக்கிறோம் என்ற கேள்வி இன்னமும் தொடரத்தான் செய்கிறது. ஒரு நல்ல இசையை எப்படி ரசிப்பது... ஒரு நல்ல கதையை எப்படி அறிந்து கொள்வது.. ஒரு நல்ல கவிதையை எப்படி புரிந்து கொள்வது... என்றெல்லாம் சொல்லித்தரப்பட்ட நமக்கு... ஒரு நல்ல சினிமாவை எப்படி அடையாளம் கண்டுகொள்வது.. ? மோசமான சினிமா எது.. ? நல்ல சினிமா எது..? என்றெல்லாம் எந்த இடத்திலும் சொல்லித்தரப்படவில்லை. சினிமா பற்றி பாடப்புத்தகத்தில் வைக்க வேண்டுமென்று சொன்னாலே நமது கல்வியாளர்களுக்கு அலர்ஜி வந்து விடுகிறது.. ஆ... ஊ... என்று வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிறார்கள். ஆனால் இந்த கேள்விகளையெல்லாம் மென்று விழுங்கியபடியே நமது சமூகம் சினிமாவை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
இப்படி சினிமா பார்த்துக்கொண்டு இருக்கும் நமது சமூகத்திற்கு.... குறிப்பாக இளைஞர்களுக்கு நல்ல சினிமாக்களை அறிமுகப்படுத்துவதுதான் இந்த தொடரின் நோக்கம். உலக சினிமா வரலாற்றில் தடம் பதித்த சினிமாக்கள்.. உலகை புதிய விதத்தில் காட்டிய திரைப்படங்கள்.. உலக சினிமாக்கள்... உள்ளூர் சினிமாக்கள்.. மாற்று திரைப்பட முயற்சிகள்.... சினிமா மொழி.. சினிமா ஆளுமைகள்... என சினிமாவின் சகல விஷயங்களையும் இந்த தொடர் உங்களுடன் பேசும்..
உலக சினிமா என்றால்.. அதற்கு என்ன இலக்கணம்? அதற்கு என்ன வரையறை? அதில் என்னவெல்லாம் இருக்கும்? இப்படி நிறைய கேள்விகள் தொடர் வண்டியாய் நீளும், கண்டம், தேசம், இனம், மொழி, கலாசாரம், பண்பாடு என உலகின் கட்டி அமைக்கப்பட்டுள்ள எல்லா எல்லைக்கோடுகளையும் தாண்டி... ஒரு படம் உங்களை பாதிக்குமெனில்.. அதை உலக சினிமா என தைரியமாக புரிந்து கொள்ளலாம். மொழி புரியாமல் போனாலும்... ஒரு சினிமா உங்களுக்குள் இறங்கி... உங்கள் அமைதியை குலைத்துப் போட்டு... உங்களை என்னமோ செய்கிறதென்றால்... அது உலக சினிமா பட்டியலில் இடம் பிடித்துவிடும். உங்கள் மன அழுக்குகளை கரைந்து போகச் செய்கிற... உங்கள் மனிதாபிமானத்தை தட்டியெழுப்புகிற.... எந்த சினிமாவும்... உலக சினிமாதான்.. படம் பார்க்கிற அந்த ரெண்டு மணி நேரமோ.. ஒன்றரை மணி நேரமோ.. உங்களை உங்களில் உணரவைத்து.... அதே சமயம் வேறெங்கோ கொண்டு செல்கிற ரஸவாத வித்தையை ஒரே நேரத்தில் செய்கிற எல்லா சினிமாக்களுமே உலக சினிமாக்கள்தான்.
அத்தகைய உலகின் மிகச்சிறந்த பத்து படங்களை யார் பட்டியலிட்டாலும் அதில் நிச்சயம் ஒரு படம் இடம்பெறும். அதுதான் “போர்க்கப்பல் பொடம்கின்”, “மான்டேஜ்” உத்தியின் தந்தை என்றறியப்படும் செர்கய் ஐஸன்ஸ்டீன் இயக்கிய திரைக்காவியம் இது. ஜார் மன்னனுக்கு எதிரான புரட்சிப் போரால் ரஷ்யா சிவந்தமண் ஆகிக்கொண்டிருந்த நேரம் அது. சீறி எழும் அலைகளின் பின்னணியில் “புரட்சி என்பது போர். வரலாற்றில் அறியப்படும் எல்லா போர்களிலும் புரட்சி ஒன்றுதான் நீதிமிகுந்தது... உரிமைக்கானது. இதுதான் உண்மையிலேயே மிகச்சிறந்த போர். ரஷ்யாவில் அத்தகையப் போர் அறிவிக்கப்பட்டு துவங்கியும் விட்டது” என்ற புரட்சித்தலைவர் லெனின் வரிகளுடன் படம் துவங்குகிறது. போர்க்கப்பலான பொடம்கின் நடுக்கடலில் நங்கூரமிறக்கி நிற்கிறது. அதன் மாலுமி ‘வாக்குலின்சுக்’ கிடம், தொழிலாளர்களின் புரட்சிப் போருக்கு நாமும் ஒத்துழைப்பு தர வேண்டுமென சக மாலுமி கேட்கிறார். அதை ஏற்கும் வாக்குலின்சுக், அன்றிரவு கப்பல் தொழிலாளர்களிடம் அதைப்பற்றி ஆவேசமாக பேசுகிறார். “ஒட்டுமொத்த ரஷ்யாவும் எழுகிறது. நாம் ஏன் காத்திருக்க வேண்டும். நாமும் குரல்கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்கிறார்.
எல்லோரும் சம்மதிக்கிறார்கள். போரைத் தொடங்கக் காரணம் வேண்டுமே.. அழுகிப் போன மாமிசத்தின் வழியே பிரச்னையைக் கிளப்புகிறார்கள். புழுக்கள் நெளியும் மாமிசத்தை சாப்பிட மறுத்து குரல் எழுப்புகிறார்கள். ஆனால் கப்பலின் மருத்துவ அதிகாரியோ, “ஒன்றும் பாதகமில்லை... கழுவிவிட்டு சாப்பிடலாம்” என திமிராக பதிலளித்துவிட்டுப் போகிறான். கொதிக்கிறார்கள் தொழிலாளர்கள். அந்த மாமிசத்திலேயே தயாரிக்கப்படும் சூப்-ஐ சாப்பிட மறுக்கிறார்கள். இதனால் கப்பல் அதிகாரிகள் கோபமடைகிறார்கள்.
கப்பலின் மேல்தளத்தில் மாலுமிகள், ஊழியர்கள் எல்லோரையும் நிறுத்தி, சூப் குடிக்காதவர்களையும் மாமிசம் சாப்பிடாதவர்களையும் சுட்டுத் தள்ள காவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. துப்பாக்கிகளுடன் காவலர்கள் சுடத் தயாராகும் போது.. “சகோதரர்களே யாரைச் சுடப் போகிறீர்கள்..? ” என மனசாட்சியை உலுக்கும் கேள்வியை எழுப்புறார் வாக்குலின்சுக். காவலர்கள் சுடத்தயங்கி துப்பாக்கிகளை கீழிறக்கும் போது, ஆத்திரமடையும் அதிகாரி, தானே துப்பாக்கியைப் பிடுங்கி சுடுவதற்குத் தயாராக.. விழித்துக் கொள்ளும் மாலுமிகள் அதிகாரிகளைத் தாக்க கப்பலுக்குள் வெடிக்கிறது கலவரம்.
அந்த மோதலின் இறுதி வெற்றி தொழிலாளர்களுக்குத்தான். அந்த சந்தோஷத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, அடிபட்டுக் கிடந்த அதிகாரி ஒருவன் வாக்குலின்சுக்கின் பின்னந்தலையில் சுட்டுவிடுகிறான். இதில் வாக்குலின் சுக் உயிரிழக்கிறார். அவரது உடலை அருகிலிருக்கும் ஒடேசா நகருக்கு கொண்டு வந்து துறைமுக கூடாரத்தில் வைத்து... “ஒரு கரண்டி கஞ்சிக்காகக் கொல்லப்பட்டவர்” என்று எழுதிவைத்து, ஊரின் திசை நோக்கி உடல் வைக்கப்படுகிறது.
இரவின் திரை விலக்கி மெல்ல விடிகிறது அந்த பனிக்காலை. சூரியனின் கதிர்களைப் போலவே ஊருக்குள் பரவுகிறது வாக்குலின்சுக்கின் மரணச் செய்தி. அவருக்கு அஞ்சலி செலுத்த மக்கள் வருகிறார்கள். ஒன்று .. பத்து... நூறு.. ஆயிரமென திரள்கிறது மனிதக்கூட்டம். துறைமுகத்திற்கு வரும் எல்லாப் பாதைகளிலும் மனிதர்கள்... மனிதர்கள் சக மனிதர்கள்தான். வாக்குலின்சுக்கின் உடலைப் பார்த்து சிலர் கண்ணீர் விடுகிறார்கள். பெண்கள் கதறி அழுகிறார்கள். ஒரு பெண் அவரது கைகளில் கண்ணீர் முத்தமிடுகிறாள். சற்று நேரத்திற்கெல்லாம் கண்ணீர் ஆவேசமாக மாறுகிறது. குமுறுகிறது கூட்டம்... கோபம் கொப்பளிக்கிறது. இந்த அநியாய கொலைக்கு பழி தீர்க்க வேண்டுமென ஒடேசா நகர மக்களை அழைக்கிறான் ஒரு கோபக்கார இளைஞன். இளைஞர்கள் கைகளை மடக்கி ஆவேசத்துடன் குரல் கொடுக்கின்றனர். மக்கள் வெள்ளத்திடையே எழுச்சியும், ஆவேசமும் பரவுகிறது. கப்பல் தொழிலாளிகள் துறைமுகத்தில் கூடுகிறார்கள். ரஷ்யத் தொழிலாளிகளோடு சேர்ந்து போராடுவோம் என்கிறார் ஒருவர். ஒடேசா நகர மக்களின் ஆவேசங் கொண்டு போராடுவோம்.... வெற்றிபெறுவோம்.. என்ற முழக்கத்திற்கிடையே கப்பலில் ஏற்றப்படுகிறது செங்கொடி...
போர்க்கப்பல் பொடம்கினை நோக்கிப் படகுகளில் தொழிலாளிகள் செல்கிறார்கள். மக்கள் கையசைத்து உற்சாகமாக அனுப்புகிறார்கள். கப்பலில் இருக்கும் மாலுமிகள் அவர்களை வரவேற்கிறார்கள். எங்கும் உற்சாகம் ஒடேசா நகரத்தின் துறைமுகப் படிக்கட்டுகளில் கூடி நின்று மக்கள் ஆர்ப்பரித்து கொண்டிருக்கும் போது.. ஜார் மன்னனின் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அணி அணியாக வந்து மக்களை சுடத் துவங்குகிறார்கள். மக்கள் கூட்டம் படிக்கட்டுகளில் சிதறியோடுகிறது. பலர் குண்டடிபட்டு படிக்கட்டுகளில் சாய்கிறார்கள். ஆனாலும் சுடுவது நிற்கவில்லை. குழந்தைகள், சிறுவர், பெண்கள், முதியோர் என எந்த சலுகையும் காட்டாமல் சுட்டுத்தள்ளுகிறது ஜார் மன்னனின் துப்பாக்கிப்படை.
இதற்கு பதிலடி கொடுக்கத் தயாராகிறது போர்க்கப்பல் பொடம்கின். அந்த நேரத்தில் அரசுப் படைகள் சூழும் தகவலறிந்து அதை எதிர்கொள்வதென முடிவெடுக்கிறார்கள். அமைதியான அந்த இரவு முடிந்தபின், அதிகாலையில் அரசு கப்பல்கள் வருவதை அறிந்தவுடன் பொடம்கின் எதிர்த்தாக்குதல்களுக்கு தயாராகிறது. பீரங்கிகள் தயராகிறது. குண்டுகள் அடுக்கப்படுகிறது. கப்பலுக்குள் வருவதற்கான ஏணிகள் மடக்கப்படுகிறது. கரும்புகையை கக்கிக் கொண்டு முன்னேறுகிறது பொடம்கின்.
அரசுப்படைக் கப்பல்களும், போர்க்கப்பல் பொடம்கின்னும் அருகருகே நெருங்குகின்றன. சுடுவதற்கு தயாராகி நெருங்கும்போது.. அரசு கப்பலில் இருக்கும் வீரர்கள் “சகோதரர்களே...” என கூவி அழைத்து புன்னகை புரிகிறார்கள். மகிழ்ச்சியில் தங்கள் தொப்பிகளை உயர்த்தி காட்டி கையசைக்கிறார்கள்.
புரிந்து விட்டது.. எல்லோருக்கும்தான் .. செங்கொடி பறக்க அரசுப் படையின் கப்பல்களும் புரட்சிக்காரர்களுடன் இணைந்துவிட்டன. பொடம்கின் முன் செல்ல அவற்றின் பின்னே மற்ற கப்பல்கள் பின்தொடர வெற்றிக்கான பயணம் தொடர்கிறது. பொட்டம்கின் கப்பலின் தோழர்கள் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கையசைக்க.. ஆரவாரக் கூச்சலுடன் நிறைவடைகிறது படம்.
ரஷ்யாவில் நடந்த கிளர்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தை உலகின் சினிமாக்களின் சிகரம் எனலாம். துண்டு துண்டான காட்சிகளை அடுத்தடுத்து இணைப்பதன் மூலம் காட்சியில் ஒரு தீவிரத்தன்மையை ஏற்படுத்தும் மான்டேஜ் என்ற முறையை பயன்படுத்தி இப்படத்தில் எடுக்கப்பட்ட ஒடேசா படிக்கட்டு காட்சிகள் இன்றைக்கும் திரைப்படம் பயில்பவர்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கிறது. இறந்த வாக்குலின்சுக்கிற்கு அஞ்சலி செலுத்த மக்கள் திரண்டுவரும் காட்சிகளும், போருக்குத் தயாராகும் பொடம்கின் கப்பல் காட்சிகளும் மான்டேஜ் உத்தியின் அற்புத விளையாட்டுக்கள்தான்.
ரஷ்யாவில் எடுக்கப்பட்ட இந்த மௌனப்படம் 1925 ஆம் ஆண்டில் வெளியாளது. இப்படத்தை இந்தியாவில் திரையிட தடைவிதிக்கப்பட்டது. போல்ஷ்விக் புரட்சியை ஆதரிக்கும் இப்படம், ஒரு புரட்சிப் படம் என்று நன்றாகவே தெரிகிறது என்ற குறிப்பை எழுதி பம்பாய் போலீஸ் கமிஷனர் இப்படத்திற்கு தடை விதித்தார். பின்னர், நாடெங்கும் தடை நீட்டிக்கப்பட்டு, சுதந்திரத்திற்கு பிறகுதான் அந்தத்தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இப்படத்தின் இயக்குநரான செர்கய் ஐஸன்ஸ்டீன், 1917ல் நடந்த புரட்சியின்போது செம்படையில் பொறியாளராக இருந்தவர். மான்டேஜ் எனப்படும் படத்தொகுப்பு உத்தியை சினிமாவுக்கு வழங்கி திரைப்பட மொழிக்கு பங்களிப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்களையும். ... போர்க்கப்பல்களையும்... பார்க்காதவர்கள் இந்தப்படத்தைப் பார்த்தால் அந்தப்போர் தருணங்களை உணர முடியும்....
பயணம் தொடரும்...




நன்றி:இளைஞர் முழக்கம்

Thursday 19 April 2012

வாசிக்கலாம் வாங்க





வாசிப்பை விரும்புபவர்கள் கவனத்திற்கு....

600 திரைகளை நோக்கி ஒரு பயணம்




ஓரு படத்தை எடுத்துவிட்டு அதை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என வழி தெரியாமல் தவிக்கும் குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகளின் துயரம் அறிந்து, அவர்களின் படங்களை மக்களிடம் கொண்டுசெல்கிற பணியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தனது தோள்களில் சுமந்து செய்துவருகிறது

.அந்தப்பணியின் அடுத்த முயற்சியாக 600 இடங்களில் திரையிடல்களை நடத்தும் ஒரு திரைப்பயணத்திற்குதயாராகி வருகிறோம். வரும் ஜூன் 15 முதல் ஜூலை 5 வரை 15 மாவட்டங்களில்அந்த பயணம் நடக்கும்.20 நாட்களில் ஒரு நாளைக்கு இரு இடங்கள் வீதம் 40திரையிடல்கள் நடக்கும்.அப்படி ஒரு மாவட்டத்திற்கு 40 வீதம், 15 மாவட்டங்களில் 600 இடங்களில் திரையிடல்கள் நடக்கும்.

திருவண்ணாமலை, சென்னை, திருப்பூர், மதுரை, புதுவை, தஞ்சை,கோவை, நீலகிரி,ஈரோடு என 15 மாவட்டங்கள் தயாராகி வருகின்றன.வாய்ப்புள்ள இடங்களில் நீங்களும் பங்கெடுக்கலாம்.கூட இணைந்து பணியாற்றலாம். வருக.